ராஜீவ் கொலை குற்றவாளிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது!!

602

Rajeev

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாகக் கூறி கடந்த பெப்ரவரி 18ஆம் திகதி இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. மேலும் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது.

இதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன், சாந்தன், பேரறிவாளன். மற்றும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யும் வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

ஆனால் தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்று 7 பேரின் விடுதலைக்கும் இடைக்காலத் தடை விதித்து பெப்ரவரி 20ஆம் திகதி உத்தரவிட்டது.

பின்னர் கடந்த ஏப்ரல் 24ம் திகதி அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் இறுதி தீர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின் போது இந்திய தண்டனை சட்டத்தின் அடிப்படையில் உரிய அரசாங்கம் என்பது குறித்து இருதரப்பு வாதங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஒரே வழக்கில் இரண்டு உரிய அரசாங்கங்கள் இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் ஆலோசனை என்பது ஒப்புதல் என்ற பொருளில் எடுத்துக்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்றும் கூறினர்.

எனவே, இந்த வழக்கில் இறுதி முடிவை எடுப்பதற்கு இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை தேவைப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள் இந்த கேள்விகளுக்கான விடையை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முடிவு செய்யும் என்று கூறி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினர்.

இந்நிலையில் சாந்தன், முருகன் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இன்று தொடங்குகிறது.

முன்பு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி முகுல் ரோஹத்கி தற்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதால் அவருடைய இடத்தில் வேறு சட்டத்தரணி ஆஜராகி வாதாடுவார்.

இதற்கு முன்பு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த 7 பேரின் விடுதலையை எதிர்த்து எதிர்மனு தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசு சார்பாக இந்த 7 பேரை விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து வாதாடப்பட்டது.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் மத்திய அரசு எதுபோன்ற நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்பதை அனைவராலும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய மீனவர்களுக்கு எந்தவகையிலும் உரிமை கிடையாது என்று சென்னை உச்ச நீதிமன்றில் மத்திய அரசு எதிர் பதில் மனு தாக்கல் செய்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. அந்த பதில் மனு ஐக்கிய முற்போக்கு அரசால் தயாரிக்கப்பட்டது என்றும் அதனை அப்படியே இந்த அரசு நீதிமன்றில் தாக்கல் செய்தது என்று பாரதீய ஜனதாவின் தமிழ்நாடு பொறுப்பாளர் முரளிதர ராவ் சென்னையில் கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய இந்த 7 பேரின் விடுதலையை மோடி தலைமையிலான மத்திய அரசு எதிர்க்குமா அல்லது வேறு வகையான நிலைப்பாடு எடுக்கும் என்பதும் கேள்விக்குரியதாக இருக்கிறது.