
உலகக்கிண்ண தொடரில் இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் பிரேசில்- ஜேர்மனி அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இறுதிப் போட்டிக்கு யார் செல்வது என்பதில் பலத்த போட்டி நிலவும்.
இரு அணிகளுமே தோல்வியை சந்திக்காமல் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. பிரேசில் அணி 11வது முறையாகவும், ஜேர்மனி அணி 13வது தடவையாகவும், தொடர்ந்து 4வது முறையாகவும் அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கொலம்பியாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதால் உலகக்கிண்ணத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இது பிரேசில் அணிக்கு பின்னடைவு என்பதில் சந்தேகம் கிடையாது.
மற்றொரு சிக்கல் என்னவென்றால் பிரேசில் அணியின் அணித்தலைவர் தியாகோ சில்வா இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்றதால் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க முடியாது.
பிரேசில் அணியில் ஹூல்க், ஆஸ்கர், டேவிட் லூயிஸ் ஆகியோர் நல்ல போமில் உள்ளனர். அதனால் சில்வா, நெய்மர் இடங்களை இவர்கள் நிரப்புவர்.
2002ம் ஆண்டில் இறுதிப்போட்டியில் பிரேசிலிடம் தோல்வி கண்ட ஜேர்மனி அணி, கடந்த இரண்டு போட்டியிலும் (2006, 2010) முறையே இத்தாலி, ஸ்பெயின் அணிகளிடம் அரையிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறியது.
அதனால் இந்த அரையிறுதியில் தோல்வியை துரத்த வேண்டும் என்பதில் ஜேர்மனி கவனமாக இருக்கும்.
ஜேர்மனி அணியில் 4 கோல்கள் அடித்த தோமஸ் முல்லர், மெசுத் ஒசில், ஸ்வாடிக்கர், பிலிப் லாம் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். இவர்கள் பிரேசில் அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.





