தோழியின் பிறந்தநாளுக்குச் சென்ற சிறுமி தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்க்கப்பட்ட அதிர்ச்சி!!

603

கோவையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 8 வயது சிறுமி வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் செண்பகவல்லி-வீரன் தம்பதி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்களுக்கு 10 வயது ஆண் குழந்தை மற்றும் 8 வயது பெண் குழந்தை கோகுலப்பிரியா ஆகியோர் உள்ளனர்.

நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுள்ளது. இதற்காக சிறுமி கோகுல பிரியாவும் சென்றுள்ளார்.

நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் சிறுமியின் பெற்றோர் வான்மதி வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது கோகுலப்பிரியா ஏற்கெனவே வீட்டிற்கு சென்று விட்டதாக வான்மதி கூறியுள்ளார்.

ஆனால் சிறுமி வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டை சுற்றிலும் தேடி உள்ளனர். அப்போது வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே தண்ணீர் சிந்திக் கிடப்பதை பார்த்து கோகுல பிரியாவின் பெற்றோர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

தண்ணீர் தொட்டியை திறக்கும்படி கூறிய போது, வான்மதி முதலில் மறுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பிறகு தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே கோகுலபிரியா சடலமாக மிதந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரது உடலை மீட்டு பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தங்களது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக செண்பகவல்லி, பேரூர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.