
கனடா-பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த 7வயது சிறுவன் தனது நண்பனிற்கு உதவுவதற்காக வாரஇறுதி நாட்களில் லெமனேட் விற்கும் முயற்சியில் ஈடுபட்டான்.
இவனது நண்பனான சிறுவன் ஒருவனுக்கு பெருமூளை வாத நோய் வந்துள்ளது. நோயை குணப்படுத்துவதற்கு விலையுயர்ந்த சத்திரசிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் அதற்கான வசதிகள் கனடாவில் இல்லை.
7 வயதுடைய குயின் காலண்டரும் பிரெய்டன் குரொஸ்டானிசும் பாலர் பள்ளியில் இருந்தே நண்பர்கள். பிரெய்டன் பெருமூளைவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நோய் தசை இயக்கம், முன்னேற்றம் போன்றனவற்றை பாதிக்கும். வளர வளர தசைகள் இறுக்கமடைந்து சாதாரண செயற்பாடுகளை செய்வதற்கே கடினமாக இருக்கும்.
இதற்கான சத்திரசிகிச்சை நியு ஜேர்சியில் தான் செய்ய முடியும். இதற்கு கிட்டத்தட்ட 15,000 டொலர்கள் வரை தேவைப்படும் அத்துடன் போக்குவரத்து ஏனைய பிசியோதெரபி போன்றவற்றிற்கான செலவினங்கள் மேலதிகமானது.
பிரெய்டனின் பெற்றோர் மகனிற்கு உதவ கடன் பெறுவதற்கு ஆயத்தம் செய்த வேளையில் குயின் தன்னால் உதவ முடியும் என முன்வந்துள்ளான்.
நண்பனிற்கு உதவுவதற்காக லெமனேட் விற்று நிதி திரட்ட பெற்றோரின் அனுமதியை பெற்று நண்பனுடன் சேர்ந்து லெமனேட் ஸ்டான்ட்டை பிற் மெடோவ் என்ற இடத்தில் கடந்த வார இறுதியில் தொடங்கினான்.
நண்பர்களிருவரும் ஏராளமான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பல தராளமனப்பாங்குள்ள குடியிருப்பாளர்கள் 20 டொலர் தாள்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதேசமயம் குயினின் தாயார் இணையத்தள நிதிதிரட்டும் முயற்சியை உருவாக்கினார். அம்முயற்சியில் அதன் இலக்கான 20,000 டொலர்களை மிஞ்சிவிட்டது.
இணையத்தளத்தில் குயின் தனது நண்பனின் நோயை விளக்கியதோடு சத்திரசிகிச்சை சம்பந்தமாகவும் அதற்கான திட்டம் ஆகஸ்ட் மாதம் எனவும் தெரியப்படுத்தியுள்ளான். திங்கள்கிழமை காலையில் தளத்தில் 48,000-டொலர்களிற்கும் மேலான தொகை நன்கொடையாக சேர்ந்துள்ளது.





