காதலித்து திருமணம் செய்த கணவன் திடீர் தலைமறைவு… வேதனையில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

193

காதலித்தவரே கணவனாகவோ, மனைவியாகவோ வருவது எல்லாம் வரம் தான். பலரும் திருமணமான நிலையிலும், தங்கள் காதல் கைகூடாதது குறித்து வாழும் காலம் முழுவதும் சோகத்தில் கரைகின்றனர்.

இந்நிலையில், காதலித்தவனே கணவனாக வந்த பின்பும், திடீரென தலைமறைவான கணவன் குறித்த வேதனையில் இருந்து வந்த புதுமணப்பெண், தன் எதிர்கால வாழ்க்கைக் குறித்த கவலையில் தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே மேலச்சிந்தலைசேரியைச் சேர்ந்தவர் சுரேஷ். ஜோதிடரான இவரது மகள் ஹேமலதா (19). பெங்களூரு இஸ்ரோவில் பணிபுரிந்து வருபவர் மணிவாசகம். சுரேஷ் உறவினரான இவரது வீட்டிற்கு சுரேஷ் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், சுரேஷன் மகள் ஹேமலதாவுக்கும், மணிவாசகத்தின் மகன் சந்துருவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மலர்ந்தது, காதலர்கள் இருவரும், தேனி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோவிலில், பதிவு செய்யாமல் தாங்களே தாலிகட்டிக் கொண்டு, மாலைகளை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரது பெற்றோர்களும் இவர்களின் காதலை ஏற்காத நிலையில், திருமணத்திற்கு பின்பு, ஹேமலதாவின் தாத்தா சேதுராமனின் வீட்டில் சில நாட்கள் தங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

மணமகளுக்கு 19 வயதும் மணமகனுக்கு 20 வயதும் ஆனதால், மணமகனுக்கு 21 வயது பூர்த்தி அடைந்தவும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று புதுமண தம்பதிகள் இருவரையும் பெற்றோருடன் அனுப்பி வைப்பது என அறிவுரை கூறி அவர்களது பெற்றோருடன் இருவரையும் போலீசார் அனுப்பி வைத்தனர்.

சந்துருவின் பெற்றோர் அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று மறைத்து வைத்துள்ளதாக புகார் கூறி, கோம்பை காவல் நிலையத்தில் ஹேமலதா மீண்டும் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் சந்துருவை தேடி வந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய காதல் கணவனைக் காணாததால், தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த ஹேமலதா தனது வீட்டிலேயே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து திருமணம் முடித்து தனது மகளுடன் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான சந்துரு மீதும், அவரது பெற்றோர் மீதும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஹேமலதாவின் உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத அறை முன்பு ஹேமலதாவின் பெற்றோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.