மாயமான கணவன்.. விதியின் விளையாட்டால் பசியுடன் குழந்தைகளுடன் சுற்றிய தாய்.. அடுத்த நொடி நடந்த விபரீதம்!!

534

கணவன் காணாமல் போனதால் ஏற்கனவே வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்த பெண்ணிடம் இருந்து மர்ம நபர்கள் பணத்தை திருடிய சம்பவத்தால் அவர்கள் விபரீத முடிவை எடுத்தனர்.

சென்னை: கணவன் மாயமானதால் தனது 2 குழந்தைகளுடன் பசியுடன் சுற்றித் திரிந்த இளம்பெண் எடுத்த விபரீத முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதாரண திருட்டு சம்பவம் எப்படி ஒரு குடும்பத்தையே அழித்துவிட்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் விளங்குகிறது.

சென்னை ஓஎம்ஆர் சாலையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வரலட்சுமி. இவரது கணவர் அண்மையில் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸார் அவரது கணவரை தேடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, கணவன் இல்லாததால் குடும்ப வருமானம் அப்படியே நின்று போனது. வீட்டிற்கு வாடகை கூட தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் வீட்டை காலி செய்த வரலட்சுமி, தனது 16 வயது மகன் மற்றும் 15 வயது மகளுடன் சென்னையை விட்டு வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். பின்னர் கேரளாவிற்கு செல்ல தீர்மானித்த வரலட்சுமி, வீட்டில் இருந்த சில நகைகளை விற்று பணம் ஆக்கினார். பின்னர் தனது பிள்ளைகளுடன் கேரளா செல்லும் ரயிலில் ஏறி பயணித்துள்ளார் வரலட்சுமி.

ஆனால், விதியின் விளையாட்டாக வரலட்சுமி கொண்டு வந்த பணத்தையும், உடைமைகளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதனால் கையில் எந்த பணமும் இல்லாததால், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் 3 பேரும் இறங்கியுள்ளனர்.

ஒருவேளை உணவு வாங்கி சாப்பிட கூட பணம் இல்லாமல் அவர்கள் தவித்துள்ளனர். பின்னர் பசி மயக்கத்தில் சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் உணவு கேட்டுள்ளனர்.

பார்க்க பரிதாபமாக இருந்ததால், அந்த நிறுவனமும் அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளது. பின்னர் அங்கேயே ஒரு ஓரத்தில் சிறிது நேரம் அவர்கள் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து, மாலையில் அங்கிருந்து வெளியேறிய அவர்கள், அங்கிருந்த கால்போன போக்கில் நடந்து சென்றுள்ளனர். கணவனும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் 2 குழந்தைகளை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத நிலையில், அங்கு வந்த ஒரு ரயிலுக்கு முன்பு குழந்தைகளுடன் பாய்ந்துள்ளார் வரலட்சுமி.

இதில் அவர்களின் உடல்கள் சிதறி பறந்தன. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், வரலட்சுமி உள்ளிட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.