ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத் திருவிழா!!

1536

ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற ஈஸ்வரங்களில் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரமும் ஒன்று. இலங்கையின் வட தேசத்தில் மாங்குளம் சந்தியிலிருந்து அண்ணளவாக 21 கி.மீ தூரத்திலே முல்லைத்தீவு செல்லும் வளியிலே அமைந்துள்ளது ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் திருத்தலம்.

ஒட்டுசுட்டான் என்றால் ஒட்டப்பட்டு சுடப்பட்டவன் என்று பொருள். இதனை ”ஒட்டிச்சுட்டான்” என்றழைப்பது தவறு. அதாவது, முன்பொரு காலத்தில் அவ்விடத்தில் குரக்கன் விதைத்து அதன் ஒட்டுக்களை (அடிக்கட்டைகளை) எரிக்க முற்பட்ட வேளை ஓரிடத்தில் அவை எரிய மறுத்துள்ளன.

பின்னர் அவ்விடத்தை கொத்தும் போது அதில் ஒரு கல் தென்பட்டதாகவும் அக்கல்லில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும், பின்பு அக்கல் ஒரு லிங்கமாக காட்சி தந்ததினால் அவ்வெட்டுக் காயத்தை ஒட்டிய பின் நெருப்பினால் சுட்டதினால் அது ”ஒட்டுசுட்டான்” என பெயர் பெற்றதாகவும் அதனாலையே அவ் லிங்க மூர்த்தி தானாகத் தோன்றி திருக்காட்சி தந்ததினால் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் எனப்பெயர் பெற்றிருக்கிறார்.

தற்பொழுது ஈஸ்வரப்பெருமானுக்கு வருடாந்தத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 13 வது திருவிழா வேட்டைத் திருவிழாவாகும். வேகாவனப்பெருமானின் 16 நாள் திருவிழாக்களிலே மிகவும் சிறப்பானது இவ் வேட்டைத் திருவிழா. பக்தர்கள் நேர்த்தி வைத்து விரதமிருந்து தம்மை வேடுவர்களாக ஒப்பனை செய்து ஈஸ்வரனுடன் தாமும் வேட்டைக்குச் சென்று மீண்டு வருவர்.

ஆலயத்தின் மேற்குத் திசையிலுள்ள வயல் வெளியுடன் கூடிய காட்டுப்பகுதியே வேட்டைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கும். வேடுவர்கள் அனைவரையும் வழிநடத்த வேடுத் தலைவன் ஒருவர் இருப்பார். இப்பதவி பரம்பரை பரம்பரையாக வழங்கப்படுகிறது.

அதைவிட வேடுவக்காலத்தைப் பொறுத்தும் பதவிகள் வழங்கப்படும். குழந்தைகள் உட்பட முதியவர்களை வேடுவ உடையுடனும், கறுப்புக் கரி படர்ந்த ஒப்பனையுடனும் காணும்போது நரம்புகளில் ஒருவகை பக்திப்பரவசம் சிலிர்த்தேறுவதை யாவரும் உணரலாம்.பக்தர்கள்.

இக்கடன் தீர்ப்பதால் தமது வியாதிகள் குணமாவதாகவும், வேண்டிக்கொண்டது கிடைப்பதாகவும் நம்புகின்றனர். இம்முறை (09.07.2014) ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேடுவர்கள் தமது கடன்களை தீர்ப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாவிய ரீதியில் இம்முறை அதிகளவிலான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தன் சந்நிதிக்கு வரக்கூடிய வசதியுள்ள அனைவரையும் ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரனாம் வேகாவனப்பெருமான் வந்தருள் பெற வழிசமைப்பான் என்பதில் ஐயமில்லை.

-வே.முல்லைத்தீபன்-

01 1 2 3