ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு… இரண்டு நாட்களாக தொடர்ந்த மீட்புபணியில் சோகம்!!

169

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் ஏப்ரல் 12ம் தேதி 6 வயது சிறுவன் தவறி விழுந்தான். இவன் 40 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக மாநில பேரிடர் மீட்பு குழு, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

40 மணி நேர போராட்டத்துக்கு பின் நேற்று காலை 8 மணிக்கு சிறுவன் இருக்கும் இடத்தை மீட்பு கருவிகள் நெருங்கின. ஆனால், சிறுவன் உயிரோடு இல்லை. அவனது உடல்மட்டுமே மீட்கப்பட்டது. ஆழ்துளைக் கிணறு குறுகலாக இருந்ததால், சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியர் பிரதீபா பால் கவலை தெரிவித்தார்.

மத்திய பிரதேச மாநிலம், ரீவா மாவட்டத்தில் உள்ள மனிகா கிராமத்தை சேர்ந்தவர் மயங்க் என்ற 6 வயது சிறுவன். நேற்று இரவு 9 மணியளவில் சிறுவன் தனது வீட்டின் அருகில் உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, வீட்டின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான்.

சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததாக தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.சிறுவனை இழந்த பெற்றோருக்கு அம்மாநில முதல்வர் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளார்.