இரு இளம் மருத்துவர்கள் பிரசவித்த”இருளைப் படைத்தல்” கவிதை நூல் – ஓர் பார்வை!!

552

Irulaip

மருத்துவ உலகின் முத்துக்கள் இரண்டு சேர்ந்து இலக்கியச் சிற்பிக்குள்ளிருந்து அண்மையில் வெகுண்டெழுந்திருக்கின்றன. பேரன்பும் பெருங்கோபமும் கொண்டோரால் வெளியிடப்பட்டிருக்கிறது.

செ.மதுரகன், பா.திலீபன் இணைந்து வவு/தமிழ் மாமன்றத்தினூடாக இப்படைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உலகிற்கே ஒளி தரும் மருத்துவர்களால் இருள் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது. இருளினூடே கட்டப்படும் கருக்கள் நிச்சயம் ஒளி விட்டுப்பிரகாசிக்கக் கூடியவை என்பதே இதன் வெளிப்படாக இருக்கலாம்.

இக்கவிஞர்களின் பெரும்பாலான கவிதைகள் தனிமனித உணர்வுகளின் பிரதி பலிப்பே என்றாலும்.. தன்னுணர்வு சார்ந்தவை. இவை இயல்பாகவே சமூகத்தில் ஒரு மாறுதலை உண்டு பண்ணும் என்பது திண்ணம். இவர்களின் அதிகளவிலான வாழ்வியல் பாதைகள் பெரும்பாலும் போர்க்காலத்தவை என்பதால் அதன் தாக்கங்களையும் உணர முடிகிறது.

தவிர இளவயதினர் என்பதால் காதல் உணர்வுகள் இயல்பாகவே இழையோடிப்போவதனையும் காண முடிகிறது. கவிஞர் திலீபனின் கவிதையொன்றினைப்பார்த்தால்.. அது ”பிரதிநிதிகள்” என தலைப்பிடப்பட்டிருக்கிறது. அதில்… ”ஆதங்கத்தோடு அவசரமாய் கூடிய பொதுக்கூட்டத்தில் சமாதானமாய் இருப்பதுபற்றி சண்டை பிடித்துக் கொண்டார்கள்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

உண்மைதான்.. இன்றைய எம்மவரிடையே முடிவெடுப்பதென்பதே ஒரு முடிவுறாத தொடராக இருப்பதனை இக்கவி உணர்த்துகிறதல்லவா..? தொடர்ந்து.. கவிஞர் மதுரகனின் கவியொன்றினைப் பார்த்தால்.. இதற்கவர் ”கடவுளின் வருகையை எதிர்நோக்கிய நியாயப்படுத்தல்கள்” எனப் பெயரிட்டுள்ளார். அதிலுள்ள சில வரிகளைப் பார்த்தால் அதன் உள்ளர்த்தம் புரிந்துவிடும்.

செங்குருதி சிதறி வைக்கப்பட்ட குங்குமத்திலும் நீ வரவில்லை உயிரச்சத்தில் ஓலமாய் ஒலித்த தேவாரத்திலும் நீ வரவில்லை.. இன்னம் இதற்குப்பிறகும் நீ வரக் காரணம் உண்டா..? இவ்வாறுகடவுளிடம் கேள்வி கேட்டுள்ளார்.

அனேகமானவர்கள் தமது கையறு நிலையிலையே கடவுளைக் கூப்பிடுகிறார்கள். விரக்தியின் விளிம்பில் நிற்பவனது விசும்பல்கள் கடவுளை நோக்கியே நீள்கிறது. மனிதன் தனது இருப்பிற்காகவே கடவுள்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறான். அம் மனிதனுக்கே அவலங்கள் வரும்போது இக் கடவுள்கள் எங்கே போயிருந்தன…?

இவ்வாறு பல கேள்விகளுக்கான விடைகளை இக்கவிதையில் மட்டுமல்ல இத்தொகுப்பு முழுவதும் தேடக்கூடியதாக இருக்கிறது. புதுக்கவிகளின் வரி நடை அதீதமாக கைக்கொள்ளப்பட்டாலும்.. வாசகனை இலகுவில் சென்றடையக்கூடிய வகையில் கவிகள் புனையப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

பல வர்ணத்துடன் தரமான தாளில் வெளிவந்த ”இருளைப்படைத்தல்” ஈழக்கவித்தடத்தில் ஒரு புதுப் பதிவாகும். எம்மவரை வாழ்த்துவதுடன்.. எம்மவரின் படைப்புக்களுக்கு பேராதரவு கொடுப்பதும் எம் கடைமையாகும்.

இருவரும் இணைந்து இறுதியில் இவ்வாறு கூறுகிறார்கள். ”நமக்குத் தொழில் கவிதையல்ல நமக்குப் புலன் கவிதை நமக்குப் புலம் கவிதை நமக்குப் புலப்பாடுகளும் கவிதையே”

அன்பகலாப்பிரியங்களுடன்..
– வே.முல்லைத்தீபன்-