பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!

800

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என பொலிஸார் நடத்திய விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மார்ச் 24ஆம் திகதி சிறுமி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, சிறுமியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஒன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

விநியோகிக்கப்பட்ட கேக்கை, சிறுமி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பொலிஸாரின் விசாரணையிலேயே இவ் விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.