மரத்தை கட்டிப்பிடிக்க 1,500 ரூபாய் கட்டணம்… இந்த வனக் குளியலை பற்றி தெரியுமா?

370

மரத்தை கட்டிப்பிடிப்பதற்கு நபர் ஒருவரின் டிக்கெட்டிற்கு ரூ.1,500 கட்டணமாக வசூல் செய்யும் நிறுவனத்தை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

பொதுவாகவே எல்லோருக்கும் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுப்பதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய வாழ்க்கை முறையில் ஏதாவது ஒரு நேரத்தில் பயணமோ, ஓய்வோ எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இன்னும் சிலர் இயற்கையோடு நாம் நேரத்தை செலவழித்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைப்பது உண்டு.

இந்த நிலையில், மரத்தை கட்டிப்பிடிக்க ரூ.1,500 கட்டணத்தை பெங்களூரு நிறுவனம் ஒன்று வசூல் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.1,500 கட்டணம்

`A Forest Bathing Experience’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ள விளம்பரத்தில் 18 சதவீதம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.1,500 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனை எக்ஸ் தளத்தில் பயனர் ஒருவர் மார்க்கெட்டில் ஒரு புதிய மோசடி உள்ளது எனக் கூறியுள்ளார்.

இயற்கையோடு தொடர்புடைய ஒரு ஜப்பானிய முறைக்கு ஷின்ரின் யோகு (Shinrin Yoku) என்று பெயர். இதனை வனக் குளியல் (Forest Bathing) எனவும் அழைக்கின்றனர்.

அதாவது, வனத்திற்குள் மெதுவாக நடந்து சென்று அமைதியாகவும் நேரத்தை செலவு செய்ய வேண்டும். மேலும், மரத்தை தொட்டு பார்த்து உணர வேண்டும்.

அந்தவகையில் பெங்களூரு நிறுவனம் ஒன்று கப்பன் பார்க்கில் மரத்தை கட்டிப்பிடித்து, அமைதியான நடைபயிற்சி மேற்கொள்ள ரூ.1,500 கட்டணம் எனக் கூறியுள்ளது. இந்த நிகழ்வானது ஏப்ரல் 28-ம் திகதி காலை 8 மணி முதல் 10.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.