
அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அவர்களின் சட்டத்தரணிகளால் தற்கொலை செய்துக்கொள்ள தூண்டப்படுகின்றனர்.
இந்த குற்றச்சாட்டை குறித்த முகாமின் முன்னாள் பணிப்பாளராக இருந்த கிரேக் லேக் என்பவர் முன்வைத்துள்ளார். அத்துடன் கிறிஸ்மஸ் அகதிகள் தற்போது அரசியலுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிறிஸ்மஸ் தீவில் உள்ள 10 தாய்மார் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள செய்தியை அடுத்தே லேக்கின் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கிறிஸ்மஸ் தீவில் உள்ள தாய்மார் அங்கிருந்து வெளியேறி நாவுறு தீவுக்கு செல்ல தயாராக இருப்பதாக அகதிகள் சார்பான பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எவரும் குறித்த தாய்மாரை தற்கொலை செய்து கொள்ளுமாறு தூண்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தெ ஒஸ்ரேலியன் வெளியிட்டுள்ள தகவலின்படி, குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று சோமாலிய யுவதிகளை விடுவித்த அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன், அவர்களை சிட்னி மேற்கில் குடியமர்த்தியமை அடுத்தே கிறிஸ்மஸின் 10 தாய்மார்களும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.





