வவுனியா ஊடாக இரண்டு லாெறிகளில் மாடுகள் கடத்தல் முறியடிப்பு : 7 பேர் கைது!!

1181

முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் காெண்டு செல்வதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்று (29.04) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும், பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் என்றும் பாெலிசார் தெரிவித்தனர்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதும் இதன் மூலம் தெரியவந்துள்ளதாக பாெலிசார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் சி தனபால, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின் கீழ் சந்தேக நபர்கள் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

வவுனியா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் பொலிஸ் பரிசோதகர் எம்.கே.அழகியவண்ண, உப பொலிஸ் பரிசோதகர் ஜீவண்ண, பொலிஸ் சார்ஜன்ட் (61518) ரன்வல, பொலிஸ் கான்ஸ்டபிள் (78448) வீரசேன, பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி (18129) திஸாநாயக்க ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.