உழைக்கும் மக்கள் ஒன்றிணைவோம், நாட்டின் வளங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இன்று (01.05) காலை வவுனியாவில் இடம்பெற்றது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய மேதின ஊர்வலம் பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்தது, அங்கு பிரதான மேதினக் கூட்டம் இடம்பெற்றது.
இம்முறை மேதினப் பேரணியில் உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலைகளைக் குறை, IMF ஆலோசனைகள்- நிபந்தனைகளால் நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை நாசமாக்காதே, வற் (VAT) வரி, மின்சாரம் உள்ளிட்ட கட்டணங்களின் அதிகரிப்பை உடன்குறை,
அந்நியக் கம்பனிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகையை உடன் நிறுத்து, தேசிய இனங்கள் மீதான பேரினவாத ஒடுக்கு முறைகளை உடன் நிறுத்து,
தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்களின் சுயாட்சி உரிமைகளை வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேதின ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெற்றது.
குறித்த பேரணியில் கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள் பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்தனர்.