சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல் : இரு இலங்கையர் உட்பட மூவர் கைது!!

613

Gold

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் இலங்கையைச் சேர்ந்த முகமது (31), காசிம் (32) இருவரும் சுற்றுலா விசாவில் வந்தனர்.

அவர்களது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்களிடம் ஏராளமான தேயிலை பக்கெட்டுகள் இருந்தன. கொழும்பில் தரமான தேயிலை கிடைப்பதால் வாங்கி வந்ததாக அவர்கள் கூறினர்.

ஆனாலும் அதிகாரிகள் சோதனை செய்த போது, 2 பேரும் தலா 1½ கிலோ தங்கத்தை பொடியாக்கி தேயிலையில் கலந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 90 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல லண்டனில் இருந்து நேற்று சென்னைக்கு விமானம் வந்தது. அதில் வந்த திருச்சியைச் சேர்ந்த இராமன் (41) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவரிடம் 2 சூட்கேஸ்கள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது 2 சூட்கேஸ்களிலும் துணிகளுக்கு அடியில் 50 தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

2 சூட்கேஸ்களில் இருந்தும் தலா 100 கிராம் எடைகொண்ட 5 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இவற்றின் மொத்த மதிப்பு 1½ கோடி ஆகும். இது தொடர்பாக இராமனை கைது செய்தனர்.

இதன் பின்னர் கைதான இலங்கை வாலிபர்கள் உள்பட 3 பேரிடமும், அந்த தங்கத்தை யாருக்காக கடத்தி வந்தனர் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.