மதுபோதையில் கொடுமைப்படுத்திய கணவன் : அம்மா,அப்பாவுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற மனைவி!!

94

தமிழக மாவட்டம் திருப்பூரில் மதுபோதையில் கொடுமைப்படுத்திய கணவரை, அவரது மனைவி தாய், தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டம் எஸ்.வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (30). இவரது மனைவி திவ்யா கடந்த ஆண்டு தனது கணவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பொலிஸார் 8 மாதங்களாக தேடியும் வடிவேல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடிவேலின் தாயார் பல்லடம் பொலிஸில் புகார் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், திவ்யா தனது தாய், தந்தை உதவியுடன் கணவரை கொலைசெய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வடிவேல் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார்.

கொலை அம்பலம்

கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றும் வடிவேல் அவரை அடித்துள்ளார். இதனால் கணவரை கொலை செய்ய திட்டமிட்ட திவ்யா, அதனை தனது தாய் மரியாள் (48), தேவராஜ் (50) ஆகியோரிடம் கூறியுள்ளார்.

அதன்படி அக்காள் கணவர் தெய்வேந்திரன் உடன் சேர்ந்து வடிவேலுவுக்கு விஷ மாத்திரை கொடுத்துள்ளனர். அடுத்து அவரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதனையடுத்து முத்து, பவுன்ராஜ், பாலாஜி ஆகியோருடன் சேர்ந்து, வடிவேலின் உடலை கருப்பு பாலிதீன் கவரால் சுற்றி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர் என தெரிய வந்தது.

திவ்யா உட்பட 7 பேரையும் கைது செய்த பொலிஸார், கிணற்றுக்கு சென்று வடிவேலின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.