போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மகள், படிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்ததால் அவரை தடியால் தாக்கி அவரது தாய் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடம் நடத்த துவங்கியதால், செல்போன் பயன்பாடும் அதிகமானது.
இதன் காரணமாக பலர், செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு இளம்பெண், அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சீதா தேவி. இவரது மகள் நிகிதா(22). இவர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனால் தேர்வுக்காக அவர் படித்து வந்தார்.
ஆனால், படிப்பதில் கவனம் செலுத்தாமல், செல்போனில் நிகிதா அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், நிகிதா செல்போன் பயன்பாட்டைக் குறைக்கவில்லை.
இதனால் அவரது செல்போனை சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் எடுத்து வைத்துக் கொண்டனர். இனிமேல் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்தமாட்டேன் என்று நிகிதா உறுதியளித்த காரணத்தால், அவரிடம் மீண்டும் செல்போனை அவரது குடும்பத்தினர் தந்துள்ளனர். தன்னிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டதற்கு தனது தாய் சீதா தேவி தான் காரணம் என்று அவருடன் நிகிதா சண்டை போட்டுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிகிதாவின் தந்தை, சகோதரி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் நிகிதாவுக்கும், சீதா தேவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
அப்போது அருகில் கிடந்த தடியை எடுத்து நிகிதா, அவரது தாய் சீதா தேவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது நிகிதா கையில் இருந்த தடியைப் பறித்து சீதா தேவி சரமாரியாக தாக்கினார். இதில் நிகிதாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு சீதா தேவி, செல்போனில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நிகிதா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், தாய், மகளுக்கு ஏற்பட்ட மோதலில் நிகிதா உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து சீதா தேவி மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சீதா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்தக்கூடாது என்ற வலியுறுத்தியதால் ஏற்பட்ட மோதலில் மகளை தாயே அடித்துக் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890