வவுனியாவில் இடமாற்றமாகி செல்லும் கிராம அலுவலருக்கு மலர்மாலைகளை அணிவித்து கண்ணீருடன் வழியனுப்பி வைத்த மக்கள்!!

3107

வவுனியா – கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் இருந்து இடமாற்றமாகி செல்லும் கிராம அலுவலர் ஒருவருக்கு அதிகளவிலான மலர்மாலைகளை சூட்டி மகிழ்வித்து, கண்ணீருடன் அப் பகுதி மக்கள் வழியனுப்பி வைத்த நிகழ்வு ஒன்று இன்று நேற்று (25.05) இடம்பெற்றது.

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் கடந்த 6 வருடங்களாக திருமதி லெ.கௌசல்யா கிராம அலுவலராக பணியாற்றி வந்திருந்தார்.

கிராம மட்ட அமைப்புக்களுடன் இணைந்து குறித்த கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களின் அபிவிருத்திக்காகவும், அம் மக்களுக்கான சேவைகளை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் வகையிலும் அவர் செயற்பட்டிருந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த கிராம அலுவலர் கந்தபுரம் பிரிவில் இருந்து நெளுக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு மற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அக் கிராம மட்ட பொது அமைப்புக்கள், கிராம மக்கள் என பலரும் மலர்மாலைக் அணிவித்து கிராம அலுவலரை மகிழ்வித்ததுடன், அவரை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.

இதன்போது குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரு மரநடுகையும் இடம்பெற்றது. மலர்மாலைகள் நிறைந்து கிராம அலுவலர் நடந்து செல்ல முடியாத அளவுக்கு கௌரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், அயல் கிராம கிராமஅலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மகளிர் சங்கத்தினர், பெண்கள் அமைப்புக்களின் தலைவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.