றீமால் புயலின் நிலவரம் குறித்து வெளியான தகவல் : இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும்!!

625

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் (27.05.2024) 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே 30 முதல் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வங்கக்கடலில் உருவான றீமால் புயல், நேற்றிரவு மேற்கு வங்கம் மற்றும் வங்கக்கடலுக்கு இடையே கரையை கடந்திருக்கிறது. இந்த புயல் மேலும் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலிலிருந்து, புயலாக வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இக் கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து கல்பிட்டி, கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.