
சதுரங்க வேட்டை பட விழாவில் நடிகர்களும், இயக்குனர்களும் வெள்ளை வேட்டி கட்டி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி சென்ற நீதிபதிக்கும், வக்கீல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. போராட்டங்களும் நடந்து வருகிறது. சட்டமன்றத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்துள்ளது.
இந்த நிலையில் வடபழனியில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் சதுரங்க வேட்டை படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து வந்து இருந்தனர்.
சதுரங்க வேட்டையில் கதாநாயகனாக நடித்துள்ள நட்ராஜ், நடிகர்கள் மனோபாலா, பொன்வண்ணன், இளவரசு ராமச்சந்திரன் சத்யா, செந்தில், வளவன், இயக்குனர் வினோத் படத்தை வாங்கி வெளியிடும் இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திரபோஸ், இசையமைப்பாளர் ஷான் ரால்டன், ஒளிப்பதிவாளர் கே.வெங்டேஷ், எடிட்டர் ராஜா சேதுபதி, உள்ளிட்டோர் வெள்ளை வேட்டி, சட்டையுடன் கலந்து கொண்டனர்.
இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், சசி போன்றோரும் வெள்ளை வேட்டியில் வந்தார்கள். சதுரங்க வேட்டை படத்தின் கதையில் வெள்ளை வேட்டி, சட்டை முக்கிய கருவாக வருகிறது என்றும் எனவேதான் இந்த ஆடை உடுத்தி வந்தோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
நட்சத்திர ஹோட்டலில் வெள்ளை வேட்டி, சட்டையில் வந்தவர்களை ஜீன்ஸ், டீசர்ட் என நாகரிக ஆடையில் திரிந்தவர்களும் ஹோட்டல் ஊழியர்களும் வியப்பாக பார்த்தனர்.
இயக்குனர் லிங்குசாமி பேசும் போது, இவ்வருடம் எங்களது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் கோலி சோடா, மஞ்சப்பை என தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளது. அடுத்து அஞ்சான் தயாராகிறது. எனவே வேறு படங்களை வாங்க வேண்டாம் என்று இருந்தேன்.
சிலர் வற்புறுத்தியதால் சதுரங்க வேட்டை படத்தை பாதி தூக்க கலக்கத்தில் பார்த்தேன். தூக்கம் அப்படியே பறந்து போனது. கடைசி வரை அவ்வளவு விறுவிறுப்பாக படம் இருந்தது. உடனே இதை வாங்கி வெளியிட முடிவு செய்தேன்.
கும்கி, வழக்கு எண் படங்கள் மாதிரி இது எங்கள் நிறுவனத்தின் முக்கிய படமாக இருக்கும். வசனங்கள் பிரமாதமாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு நிச்சயம் இப்படம் பிடிக்கும் என்று அவர் கூறினார்.





