ஆந்திரப் பிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், எலுரு நகரைச் சேர்ந்தவர் யேசுரத்னம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜக்கு ரத்னா கிரேஸ் (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் யேசுரத்னத்தை காதலிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று, எலுருவில் ஜக்கு ரத்னா கிரேஸின் வீட்டின் அருகே, யேசுரத்னம் அவரை வழிமறித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் ஜக்கு ரத்னா கிரேஸ் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த யேசுரத்னம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜக்கு ரத்னா கிரேஸின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் நிலைக்குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் யேசுரத்னம் தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்த இடம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், யேசுரத்னத்தை மீட்டு எலுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜக்கு ரத்னா கிரேஸின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யேசுரத்தினம் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். யேசு ரத்தினம், ஜக்கு ரத்தினத்தை கத்தியால் குத்தும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.