வீரரைக் கண்டுபிடிக்க உதவுங்கள் : முன்னாள் நட்சத்திர வீரர் லசித் மலிங்க விடுத்துள்ள கோரிக்கை!!

276

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான லசித் மாலிங்க தற்போது ஒரு இளம் வேகப்பந்து வீச்சாளர் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.

லசித் மாலிங்காவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில், ஒரு இளவயது வேகப்பந்துவீச்சாளரின் காணொளியை வெளியிட்டு ”இந்த வீரரைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என்ற கருத்தை பதிவிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜாம்பவானாக கருதப்படுகிறார்.

மாலிங்கவின் தனித்துவமான பந்துவீச்சு பாணி உலகெங்கிலும் உள்ள அதிகமான கிரிக்கெட் ரசிகர்களை அவரை நோக்கி ஈர்த்த முக்கிய காரணியாகும்.

சர்வதேச கிரிக்கெட் களத்தில், முன்னரை விட அவரது தனித்துவமான ‘ஸ்லிங்கா’ பந்துவீச்சு பாணியைப் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் ஆட்டத்தில் இத்தகைய பந்துவீச்சாளர்கள் வெளிப்படுத்திய சிறப்பான திறமையே அதற்குக் காரணமாகும்.

தற்போதைய சர்வதேச கிரிக்கெட் களத்தில் ‘ஸ்லிங்க’ நிலையில் பந்து வீசும் இரு வீரர்கள் இலங்கை அணியில் இருப்பதும் சிறப்பான விடயமாகும். இவ்வாறானதொரு நிலையில் லசித் மாலிங்க அதேபோன்ற ஒரு பந்து வீச்சாளர் மீது தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.

குறித்த பந்துவீச்சாளர் பாடசாலை மாணவர் என்பதால் இன்னும் 05 முதல் 07 வருடங்களில் இலங்கை கிரிக்கெட்டுக்கு இந்த வீரர் மதிப்புமிக்க வீரராக இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.