கொழும்பு-கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் தனது செல்லப் பிராணியான நாயுடன் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கன, பொலத்தபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 26 வயதுடைய பல்கலை மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பல்கலை மாணவியின் செல்லப்பிராணியான நாய் கடந்த 4 ஆம் திகதி அன்று வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது மரத்தில் மோதி காயமடைந்துள்ளது.
இதனையடுத்து மாணவி தனது நாயை கேகாலை தனியார் கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றபோது, நாயின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் நாயை பேராதனையில் உள்ள கால்நடை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த 7 ஆம் திகதி அன்று தனது தங்கை மற்றும் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞருடன் முச்சக்கரவண்டியில் தனது நாயை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, எதிர்திசையில் பயணித்த லொறி ஒன்று அவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பல்கலை மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அத்துடன் விபத்தின் போது பல்கலை மாணவியின் நாயும் உயிரிழந்த நிலையில், லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.