விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி.. மூக்குத்தி போட்டு அழகு பார்த்த பாட்டி!!

305

எத்தனை கனவு கண்டிருப்பாள் அந்த சிறுமி. எதிர்கால வாழ்க்கை குறித்த அத்தனைக் கனவுகளும் பாழாய் போனது. உயிரிழந்த சிறுமிக்கு ஆசைப்பட்டது போலவே மூக்குத்தி போட்டு பாட்டி அழகுப்பார்த்ததைக் கண்டு உறவினர்கள் கதறியழுதனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ரெட்டியார்பாளையம் புதூர் அருகே விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் உயிரிழந்த சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி குத்த வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இந்த ஆசையை அவருடைய பாட்டி நிறைவேற்றியுள்ளார். சிறுமியின் உடலுக்கு அவர் கண் கலங்கியபடி தங்க மூக்குத்தி அணிவித்தார்.

இச்சம்பவம் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.புதுச்சேரியில் நேற்று முன் தினம் காலை விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.பி.,க்கள் செல்வ கணபதி, வைத்திலிங்கம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் சிவசங்கர், சம்பத், செந்தில்குமார், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும், அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் நடந்த விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “விஷவாயு பரவாமல் தடுக்க ரெட்டியார்பாளையம் பகுதியில் மட்டுமில்லாமல் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும்.

விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்” என்றார்.

சுற்றுச்சூழல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து எவ்வித வாயு பரவியது என ஆய்வு மேற்கொண்டனர். அதே சமயம் புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 3 தெருக்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

பாதிக்கப்பட்ட தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்த 200 வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்புடன் அருகேயுள்ள இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்