வவுனியாவில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் பொலிசாரால் மடக்கிப் பிடிப்பு : 4 பேர் கைது!!

1390

வடக்கில் இருந்து புத்தளம் மற்றும் கொழும்பு நோக்கி இரு வாகனங்களில் கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் ஓமந்தைப் பகுதியில் வைத்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று (14.06.2024) தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக தலைமையில் ஏ9 வீதியில் விசேட சோதனை ஒன்றை பொலிசார் மேற்கொண்டனர்.



இதன்போது ஏ9 வீதியூடாக பயணித்த வாகனங்களை சோதனை செய்த போது இரு வாகனங்கள் நிறுத்தாது வீதியூடாக தப்பிச் சென்றுள்ளன. விரட்டிச் சென்ற பொலிஸார் அவ்விரு வாகனங்களையும் வழிமறித்து சோதனை செய்ததில் வாகனத்தில் சட்டத்திற்கு முரணாக உரிய அனுமதிகளின்றி கடத்தப்பட்ட 70 ஆடுகள் மற்றும் 18 மாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வடக்கின் கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கி கடத்தப்பட்ட 70 ஆடுகளுடன் கூடிய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

மற்றைய வாகனம் வடக்கின் முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி கடத்தப்பட்ட 18 மாடுகளுடன் மீட்கப்பட்டதுடன் அதனை கொண்டு சென்ற இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இவ்விரண்டு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.