நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் அருவங்காடு பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதான கவின் குமார். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த இவர், வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
குன்னூர் அருகில் உள்ள எடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரோஷினி என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். சாதி மாறி கவின் குமாரைக் காதலித்து வந்ததை அறிந்து ரோஷினி வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பையும் மீறி, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். அருவங்காடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரிய காதலர்கள், கடந்த மாதம் 25 – ம் தேதி கோயிலில் திருமணம் செய்துள்ளனர்.
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பில் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 11 – ம் தேதி இரவு இவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த ரோஷினியின் உறவினர்கள், கவின் குமார், அவரின் சகோதரி மற்றும் தாயாரைத் தாக்கியுள்ளனர்.
ரோஷினியையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மனைவியை கடத்திச் சென்றதாக கணவர் கவின் குமார் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
விசாரணையில் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரோஷினியை அடைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கடத்தலில் ஈடுபட்ட தாய், உறவினர்கள் என மொத்தம் 7 பேர் மீது வழக்குபதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர், “கவின் குமார் அளித்த புகாரின் பேரில் அருவங்காடு போலீஸார் வழக்குபதிவு செய்து கவின்குமாரின் மனைவி ரோஷினியை தேடி வந்தனர். ரோஷினியின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருந்தது.
ரோஷினியின் தந்தை கோபாலகிருஷ்ணன், அவரை ஓசூருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதாக தகவல் கிடைத்தது. உடனடியாக ஓசூர் விரைந்த தனிப்படையினர், அங்குள்ள ஒரு வீட்டில் இருந்த ரோஷினியை மீட்டனர்.
பெண்ணைக் கடத்தியது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளுக்கு மேல் ரோஷினி தாயார் சாந்தி மற்றும் உறவினர்கள் என 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது ” என்றனர்.