முல்லைத்தீவு பகுதியொன்றில் உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி 17.06.2024 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 திகதி அன்று இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முத்தையன்கட்டுப் பகுதியில் கூலி வேலை செய்துவந்த குறித்த குடும்பஸ்தர் வீதியால் சென்று கொண்டிருந்த வேளை 17 வயதுடைய இளைஞன் ஓட்டிச்சென்ற உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
விபத்தில் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனை மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்டு முள்ளியவளையில் வசிந்துவந்த 27 வயதுடைய சிறீஸ்கந்தராசா அரவிந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய 17 வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.