அமெரிக்காவில் தொடரும் சோகம்… இந்திய இளம்பெண் சுட்டுக்கொலை!!

273

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கார்டெரெட் பகுதியில் வசித்து வந்தவர் 29 வயது ஜஸ்வீர் கவுர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஜஸ்வீர் கார்டெரெட் பகுதியில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் லாரி டிரைவராக வேலை பார்க்கிறார்.

இவருடைய வீட்டுக்கு 20 வயதான உறவுக்கார பெண் ககன்தீப் கவுர் வந்திருந்தார்.அந்த சமயத்தில் 19 வயதான ஒருவர், ககன்தீப் கவுரை வீட்டிற்கு வெளியே சந்தித்து பேசினார். சிறிது நேரத்தில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.



ககன்தீப் கவுர், உதவிக்கு ஜஸ்வீர் கவுரை அழைத்து வந்த போது ககன்தீப் கவுருக்கு ஆதரவாக பேசி உள்ளார். அப்போது ஆத்திரமடைந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஜஸ்வீர் கவுரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். அதன் பிறகு ககன்தீப் கவுரையும் சுட்டுள்ளார்.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜஸ்வீர் கவுர் உயிரிழந்தார். ககன்தீப்கவுருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வாஷிங்டனின் கென்ட் நகரில் வசித்து வரும் கவுரவ் கில் (19) என்பதும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர் விசாவில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த ககன்தீப் கவுர், சமீபத்தில் தனக்கு படிப்பில் சிக்கல் இருப்பதாக ஜஸ்வீர் கவுரிடம் கூறியிருக்கிறார். அவருக்கும் கவுரவ் கில்லுக்கும் என்ன தொடர்பு? ஏன் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இருவரும் இதற்கு முன்பு இந்தியாவில் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.