தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி யாழில் போராட்டம்!!

311

யாழ். காரைநகர் ஊரி பகுதியைச் சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர் கடற்படை சிப்பாயால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிப்புத் தெரிவித்து கண்டன போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

பிரதேச மக்களால் காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை 11 மணியளவில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காரைநகர் ஊரி பிரதேசத்தினை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை கடற்படை சிப்பாய் ஒருவர், 11 தினங்களாக பாடசாலை நேரத்தில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்றைய தினம் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், சி.சிறிதரன் வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சி.சிவமோகன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் ஆ.ஆனைமுகன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்தர் ஆ.சிவதட்சணாமூர்த்தியிடம் கையளிக்கப்பட்டது.

அதில் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய கடற்படை சிப்பாய் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான செயல்கள் நடைபெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் தமிழ் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டு உள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் 7 கடற்படை வீரர்களை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று யாழ் சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3