உக்ரைன்- ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த மலேசிய பயணி ஒருவர் கடைசி நேர காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது இணையதளத்தில் அதிவேகமாய் பரவி, பலரால் பார்க்கப்பட்டு வரும் இந்த காணொளியில் அலி முகம்மது சலிம் என்பவரால் எடுக்கப்பட்டுள்ளது.
ராட்டர்டாமில் உள்ள எரஸ்மஸ் பல்கலைக்கழகத்தில், உளவியல் படிப்பில், பிஎச்டி செய்து வந்த அவர் ஜோஹார் மாகாணத்தின் முவார் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் விமானம் அம்ஸ்டர்டாமிலிருந்து புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், தான் எடுத்த காணொளியில் அவர் பேசியதாவது, விமானத்தில் பயணிப்பது தனக்கு நடுக்கமாக உள்ளதாகவும், கடவுளை பிராத்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.
14 விநாடிகள் ஓடும் இந்த காணொளியில், பயணிகள் தங்களது பொருட்களை இருக்கைகளின் மேலே வைத்துக் கொள்வது பதிவாகியுள்ளது.
மேலும் காணொளியில் விமானியின் குரலும் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் கூறியதாவது, தற்போது நாம் புறப்படத் தயாராகி விட்டோம். சரக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. எனவே அனைவரும் உங்களது கைபேசியை அணைக்கவும் என்ற அறிவிப்புடன் இந்த காணொளி நிறைவடைகின்றது.
இன்ஸ்டாகிராம் மூலம் சலிம் பதிவேற்றும் செய்துள்ள இந்த காணொளி தற்போது யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் ஆகிய தளங்களிலும் பரவி வருகிறது.






