இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று பயணிகளுடன் நேற்றிரவு ( 28) அம்பாறை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது நேர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடனான விபத்தை தவிர்ப்பதற்காக பள்ளத்தில் பாய்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை – வங்களாவடி பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மற்றும் பேரூந்து நடத்துநர் ஆகியோர் காயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டி ஊடாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான பேரூந்தை மீட்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
விபத்துக்குள்ளான பேருந்தில் 40க்கும் அதிகமான பொதுமக்கள் பயணம் செய்துள்ளனர். பேருந்தில் பயணித்த பயணிகள் மாற்று வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.