விமானத்திலேயே உயிரிழந்த இளம்பெண்… இந்தியா புறப்பட்ட நிலையில் சோகம்!!

610

இந்தியாவுக்கு வந்து ரொம்ப வருடங்களாயிற்று என்று ஆசையாசையாய் பெற்றோரைப் பார்ப்பதற்காக தயாராகி வந்தார் மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் 24 வயது இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார்.

சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த மன்ப்ரீத் கவுர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்க உற்சாகமாக இருந்தார்.

விமானத்தில் ஏறும் முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படும் கவுர், எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானத்தில் ஏறினார். ஆனால், தனது சீட் பெல்ட்டை அணிய முயன்ற போது, ​​இருக்கையில் மயங்கி விழுந்துள்ளார்.

விமானம் மெல்போர்னில் போர்டிங் கேட்டில் இருந்த போது, ​​​​கேபின் குழுவினர் மற்றும் அவசர சேவைகள் அவருக்கு உதவ விரைந்தன. ஆனால், அவர் சரிந்து மயங்கி விழுந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்புக்கான காரணம் காசநோய் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கவுர் சமையல்கலை படிக்கும் அதேநேரத்தில், ஆஸ்திரேலியா போஸ்டில் பணிபுரிந்து வந்தார். மார்ச் 2020ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற கவுர், தனது பெற்றோரைப் பார்க்க இந்தியாவுக்கு பயணப்பட்ட நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், கவுரின் குடும்பத்திற்கு உதவ GoFundMe பக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கவுரின் நண்பர்கள் அதில் நிதிதிரட்டி வருகின்றனர்.