யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழரின் காணி ஒன்றினை ஆள் மாறாட்டம் செய்து உரிம மாற்றம் செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் வெளிநாடொன்றில் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றார். இந்நிலையில் யாழில் உள்ள தனது காணிக்கான அற்றோனித்தத்துவ அதிகாரத்தை தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு புலம்பெயர் தமிழர் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், காணி உரிமையாளரின் சொந்தச் சகோதரி பிறிதொரு தேவையைக் காரணம் காட்டி ஒன்றுவிட்ட சகோதரியிடமிருந்து உறுதியைப் பெற்றுச்சென்று மோசடியாக அந்த காணிக்கு உரிமை மாற்றம் செய்துள்ளார்.
காணி உரிம மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து ,அது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற தடுப்பு பொலிஸ் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், காணி மோசடி செய்த புலம்பெயர் தமிழரின் சகோதரியைக் கைது செய்து அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உதவிய பிறிதொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பெண்கள் முற்படுத்தப்பட்ட போது, 10 ஆயிரம் ரூபாவுக்காகவே தான் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அவர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை ஆள்மாறாட்டத்துக்குத் துணைபோன பெண் (10 ஆயிரம் ரூபாவுக்காக கையொப்பம் வைத்தவர்) கொழும்பைச் சேர்ந்தவர் என்றும், சுன்னாகத்தில் தற்காலிகமாக வசித்தபோதே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாது ஆள்மாறாட்டம் செய்து, சட்டத்தரணியின் முன்னிலையில் கையொப்பம் வைத்த போது தான் நோய்வாய்ப் பட்டுள்ளதாகத் தெரிவித்து அவர் மாஸ்க் அணிந்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அன்றோனிக்பவர் கொடுக்கும் நம் புலம்பெயர் உறவுகள் சித்தித்து செயல்படவேண்டுமென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.