2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேறினால் தான் அரச ஊழியர்களுக்கு சம்பளம்!!

506

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும் என போக்குவரத்து மற்றும் வெகுசன ஊடகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ரணில் ஏற்றுக் கொண்ட சவால்

தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்திற்குப் புறம்பாக செயற்பட எவரேனும் கனவு கண்டால், இந்த நாடு மீண்டும் வீழ்ச்சியடைவதைத் தடுக்க முடியாது.

எனவே, இந்தப் பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் ஆதரவும் கிடைக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

கடந்த காலங்களில் திறைசேரியில் டொலர் கையிருப்பு இருக்கவில்லை. நாடு கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான வரிசைகள் உருவாகின.சமூகம் முழுமையாக வெறுப்புக் கலந்த சமூகமாக மாறி, நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பட்டன.

நாட்டைப் பொறுப்பேற்க எவரும் முன்வராத வேளையில், பிரதமராகவும், முதிர்ந்த அரசியல்வாதியாகவும் அனுபவம் வாய்ந்த ரணில் விக்ரமசிங்க அந்தச் சவாலை ஏற்று நாட்டை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்.

அவர் செய்த முதல் விடயம், சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்று நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அதனை வெற்றியடையச் செய்ய பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

அத்துடன், ஒரு நாடு என்ற வகையில் இதற்கு முன்னர் 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்திற்குச் சென்றிருந்ததால், இம்முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட முறையில் கடன் வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு மிகவும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட வேண்டியிருந்தது.

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம்

இதன் விளைவாக, 2027 ஆம் ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்துடன் நீடிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்திற்குச் செல்ல முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தத்தின் பின்னரே, நம் நாடு சுவாசிக்கத் தொடங்கியது எனலாம்.

அனைத்து விடயங்களிலும் தன்னிறைவு அடையாத நாடாக நாம் கண்டிப்பாக வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

அரசியல் ரீதியில் யார் தலைவராக இருந்தாலும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில் கொடுக்கல் வாங்கல்களைப் பேண முடியாது.

இத்தகைய பரிவர்த்தனைகள் உலக விதிகளின்படி மட்டுமே நடக்க வேண்டும். நீடிக்கப்பட்ட கடன் வசதி ஒப்பந்தத்தின்படி, 2027 ஆம் ஆண்டு வரை கடன் ஒப்பந்தத்தில் ஈடுபட முடிந்துள்ளது. எனவே நாங்கள் வருடந்தோறும் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்.

இன்னும் சில மாதங்களில், 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அரச ஊழியர்களின் சம்பளம், சிரேஷ்ட பிரஜைகளுக்கான ஓய்வூதியம், சமுர்த்தி, அஸ்வெசும என்பன ஏழைகளுக்கு வழங்கப்படும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இல்லாமல், வரவுசெலவுத்திட்டத்தை 2027 வரை தயாரிக்க முடியாது.

சர்வதேச நாணய நிதியம் 2025 வரவு செலவுத் திட்டத்திற்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும். உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி வங்கி 300 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வரவுசெலவுத் திட்டத்திற்காக வழங்குகிறது.

வரவு செலவுத் திட்ட ஆவணம் தயாரிக்கும் போது மேலும் 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணமாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இவ்வாறுதான் தயாரிக்கப்பட வேண்டும். யார் ஆட்சி செய்தாலும் அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம், நிவாரணங்கள் போன்றவற்றுக்கு பணம் கண்டிப்பாகத் தேவை. இந்த முறையைத் தவிர, வரவுசெலவுத் திட்டத்திற்கான பணத்தைப் பெற வேறு வழியில்லை என குறிப்பிட்டுள்ளார்.