உலகம் மாறிப் போகுதையா!!

490

Poem

குடிதண்ணிக்காய் உயிர் தவிக்கும்
உடலுள்ளே தண்ணியும் குடலரிக்கும்
அடுப்பிலே பூனையும் படுத்திருக்கும்
அநியாய வட்டியில் குடி தொடரும்-பணம்..

கொடுத்தவன் உறுதியை அறுதியென்பான்-இவன்
தொங்கிட கோவணம் இல்லையென்பான்
தின செய்திகள் தலைப்பெல்லாம் தற்கொலைகள்
திடுக்கிடும் தகவல்கள் வேதனைகள்
பாவிகள் செய்திடும் வன்செயல்கள்..

ஆவியாகினும் அடங்கிடா தறுதலைகள்
முறையற்ற உறவுகள் கணக்கெடுப்பு-மீதி
இருப்பவர் கைவிரல் அளவிருப்பு
உடல்களை பணத்துக்காய் விலைமதிப்பு-உயிர்
உறவுகள் அதலால் பரிதவிப்பு..

கொலை கொள்ளை தொடர்ந்திடும் கற்பழிப்பு-இதை
அடக்குவார் துாங்கிடில் யார் பொறுப்பு
கொடியவர் தலைகளை முதல் எரிப்பு
செய்திட வேண்டும் புது நெருப்பு
தீயவரே தீயதை தீயிலிட்டால்-பெரும்
காவல் என்றுமே தேவையில்லை..

தொடர்களின் கதைக்கென அழுதிடுவாள்
தொட்டிலில் பிள்ளையை அழவிடுவாள்
விளம்பர வேளையில் உணவிடுவாள்
மின்வெட்டு நேரத்தில் கொதித்தெழுவாள்
மதிகெட்டு போச்சுது பாவமய்யா-சில
மனுதிகளால் வீடு நாறுதையா..

வீட்டிலே வேலைகள் நிறைந்திருக்கும்
வீதி மதவிலே அவனது தலையிருக்கும்
நறுமணம் இல்லத்தில் நிலைத்திருக்கும்
துர்மணம் தேடியே மனம் தெறிக்கும்
நல்லதை சொல்லிட பலர் இருக்கார்-அதை
நல்லதாய் விளங்கிட யார் இருக்கார்
உள்ளத்தில் ஊனங்கள் நிறைந்திருக்கார்
உண்மையாய் வாழ்ந்திட மறந்திருக்கார்.

-திசா ஞானசந்திரன்-