கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – இருவர் பலி : கோடீஸ்வரரின் மனைவி தொடர்பான தகவல்!!

581

அத்துருகிரியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவியும் காயமடைந்துள்ளார்.

அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குறித்த இடத்தில் அவரது மனைவியும் இருந்துள்ளார்.

காயமடைந்த பெண்ணுக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.

புதிய இணைப்பு : அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாடகி கே.சுஜீவா உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் இணைப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகி கே. சுஜீவா என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் பிரபல கோடிஸ்வரரும் கிளப் உரிமையாளர் கிளப் வசந்தா உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம், அதனை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.