புத்தளம்(Puttalam) – மஹகும்புக்கடலை, இலக்கம் 4 கிவுல பிரதேசத்தில் நான்கு வயதுடைய சிறுவனின் உயிரை 15 வயது பாடசாலை மாணவனொருவன் காப்பாற்றியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08.07.2024) இடம்பெற்றுள்ளது.
புத்தளம், மஹகும்புக்கடலை பிரதேசத்தில், அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனொருவன் தனது வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், தவறுதலாக 36 அடிக்கு மேல் ஆழமுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்துள்ளார்.
இதன்போது, கிணற்றில் விழுந்த சிறுவன் கூச்சலிட்டதையடுத்து, சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளமையயை அறிந்து கொண்ட 15 வயதுடைய மாணவன் உடனடியாக கிணற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றியுள்ளார்.
புத்தளம், மஹகும்புக்கடலை, இலக்கம் 4 கிவுல கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய ஆகாஷ் நெதுமின என்ற சிறுவனே கிணற்றில் விழுந்துள்ளதுடன் சசிந்து நிம்சர என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரை காப்பாற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உயிரை காப்பாற்றிய மாணவன் கூறுகையில், “தம்பிக்கு நான் சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தேன். அவர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் செல்வதாய் கூறி விட்டு சென்றார்.
நான் சமையல் அறைக்குச் சென்று கோப்பையை கழுவி விட்டு வெளியே வரும் போது, சசிந்து அண்ணா என்று சத்தம் கேட்டது. நான் உடனடியாக கிணறு இருக்கும் பக்கத்திற்கு சென்று பார்த்தேன்.
அப்பொழுது தம்பி கிணற்றில் மூழ்குவதை கண்டு, உடனடியாக கிணற்றில் குதித்தேன். பின் மேலே வந்த தம்பியை பிடித்துக் கொண்டு அருகில் இருந்து மோட்டாருக்கான குழாயை பிடித்துக் கொண்டவாறு சத்தமாக கத்தி உதவி கோரினேன்.
பின்னர் தம்பியின் அம்மாவும் ஏனையோரும் வந்து எங்களை காப்பாற்றினர்.” என அவர் தெரிவித்துள்ளார்.