கனடா(Canada) ரொறன்ரோ நகரத்தில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு திருடப்பட்ட 20 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான 400 கிலோ தங்கம் இந்தியா மற்றும் டுபாய்க்கு கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பியர்சன் விமான நிலையத்தில் உள்ள கனடா சரக்கு டெர்மினலில் இருந்து 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்டன. 3 நாட்களுக்கு பிறகு தங்கம் திருடப்பட்டது பொலிஸாருக்கு தெரியவந்தது.
400 கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டிககளின் விலை இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.450 கோடியாகவுள்ள நிலையில் திருடப்பட்ட தங்க கட்டிகள் இன்று வரை மீட்கப்படவில்லை.
இந்தத் தங்கம் இந்தியா மற்றும் துபாய்க்கு வந்திருக்கலாம் எனவும், நெட்ஃபிளிக்ஸின் கிரைம் சீரிஸ் பாணியில் இந்த திருட்டு நடந்ததாகவும் கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த திருட்டுக்கு போலி சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேரும் உள்ளதாகவும், இது வரலாற்றில் மிகப்பாரிய திருட்டு என்று பொலிஸார் விவரித்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் அளித்த பொலிஸார், விமான நிறுவன ஊழியர்கள் இருவரின் உதவியுடன் இந்த திருட்டு நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதன் போது திருடப்பட்ட தங்கத்தை உருக்கி தங்க வளையல்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.