
வவுனியாவில் வாடகைக்கு அமர்த்திய ஹயஸ் ரக வாகனத்தில் மாட்டை கடத்தியவர் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாரால் நேற்று (09.07) கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, பாவற்குளம் பகுதியைச் சேர்ந்த சிலர் ஆச்சிபுரம் பகுதியில் ஹயஸ்ரக வாகனம் ஒன்றினை வாடகைக்கு பெற்றதுடன், குறித்த வாகனத்தில் கோவில்குளம் பகுதியில் இருந்து இரு மாடுகளை கடத்தியுள்ளனர்.

மாடுகளுடன் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதால் குறித்த வாகனத்தை வாகன திருத்தும் இடம் ஒன்றில் நிறுத்தி விட்டு இரு மாடுகளையும் இறைச்சிக்காக விற்றுள்ளனர்.

மாடு கடத்தப்பட்டமை தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி வழிகாட்டலில்
உப பொலிஸ் பரிசோதகர் அகமட் தலைமையில் பொலிஸ் சார்ஜன்ட்டுகளான,

திசாநாயக்க (37348), திலீபன் (61461), பொலிஸ் கொன்தாபிள்களான உபாலி (10945), தயாளன் (9792), ரணில் (81010) உள்ளடங்கிய பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, மாடுகளை கடத்திய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், விபத்துக்குள்ளான வாகனமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளின் பின் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.





