தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ், வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு அல்லது தொலைதூர இடத்திலிருந்து வேலை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளை வழங்குவது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போது தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறித்த சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, தற்போதுள்ள 13 சட்டங்களை ஒன்றிணைத்து தொகுக்கப்படும், புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்றாகும்.
1935 இன் தொழிற்சங்க ஆணை எண் 14, 1941 இன் ஊதிய வாரிய ஆணை எண் 27, 1942 இன் தொழிற்சாலை ஆணை எண் 45, தொழில் தகராறுகள் சட்டம் 1950 இன் எண் 43, டர்மினேஷன் சிறப்பு விதிகள் சட்டம் 1971 இன் எண் 45 ,கடை மற்றும் அலுவலகச் சட்டம் 1954 இன் எண் 19 ஆகியவை புதிய சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டு மாற்றப்படும் 13 சட்டங்களில் அடங்கும்.
விடுமுறை
புதிய சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளில், ஒரு தொழிலாளி ஒரு குறிப்பிட்ட வாரத்தில் மேலதிக நேரம் வேலை செய்தால் அவை கூடுதல் நேரத்தில் இணைக்கப்படாமல் அவருக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்படும்.
இதேவேளை ஓர் சுருக்கப்பட்ட வேலை வாரம் அறிமுகம் செய்யப்படும். அதாவது ஒரு தொழிலாளி நான்கு நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட 45 மணிநேர வேலைகளை ஈடுகட்டினால், மூன்று விடுமுறை நாட்கள் வழங்கப்படும்.
மேலும், வீட்டு வேலை செய்பவர்களும் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.