திருகோணமலை வர்த்தகர் ஒருவர் கெப் வண்டியில் கடத்திச் செல்லப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டதால் உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் திருகோணமலை – அலஸ் தோட்ட பகுதியை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காணாமல்போன வர்த்தகர் இறுதியாக மொரவெவ பகுதிக்கு வந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனம் கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வில்கம் விகாரைப்பகுதியை கடந்து பயணித்துள்ளதை சி.சி.ரி.வி காணொளி மூலம் கண்டறிந்தனர்.
அதன் பின்னர் அவரது வாகனம் மொராவெவ பகுதிக்கு வராத நிலையில் இடைப்பட்ட காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள்.
இதன்போதே பன்மதவாச்சி காட்டுப் பகுதியில் இவர் பயணித்ததாக கூறப்படும் வாகனத்துடன் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இவருடைய உறவினர்கள் உட்பட பலரிடம் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை தனிப்பட்ட காரணத்துக்காக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.