பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கையின் முன்னணி நிறுவனமொன்றின் தலைவர் கைதுசெய்யப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிறுவன தலைவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நாடு திரும்பியதும் அவர் கைது செய்யப்படுவார் என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேசமயம் நிறுவன தலைவரான சந்தேக நபருக்கு கோட்டை நீதவானால் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் சந்தேக நபர் இருக்கும் இடம் தொடர்பில் எந்த தகவலும் இல்லை எனவும், பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்தவுடன் கைதுசெய்யப்படுவார் எனவும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 7ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தேக நபர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கொழும்பைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபர் வெளிநாட்டில் இருந்தபோது அவரின் வணிக ஆய்வாளராக குறித்த பெண் ஒரு மாத காலமாக இணையம் ஊடாக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 6 ஆம் திகதி சந்தேக நபர் நாடு திரும்பிய நிலையில், குறித்த பெண்ணை 7 ஆம் திகதி சந்திக்க விரும்புவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட இடத்தில் பெண்ணை சந்தித்த சந்தேக நபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், சம்பவம் நடந்த அன்றே சந்தேக நபர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.