இந்திய மாநிலம் கர்நாடகாவில் பெண்ணொருவர் தனது மகனை கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர் (42), ரம்யா (40). காதல் தம்பதியான இவர்களுக்கு 19 வயது மகளும், 13 வயது மகனும் இருந்தனர்.
இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், சில ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனுடன் வசித்து வந்த ரம்யா, வீட்டுக்கு வாடகை செலுத்த முடியாமலும், போதிய வருமானம் இல்லாமலும் திணறியுள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர், கடந்த 9ஆம் திகதி சேலையைக் கொண்டு மகனை தூக்கிலிட்டு தொங்கவிட்டு கொலை செய்துள்ளார்.
அதன் பின்னர் அவரும் சேலையில் தூக்குமாட்டி உயிரிழந்துள்ளார். விடுதியில் தங்கி படித்து வந்த அவரின் மகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
உடனே அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்த உள்ளே சென்று பார்த்தபோது, தனது தாயும் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்றது.
வீட்டில் நடந்த சோதனையில் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ரம்யா ‘தங்கள் இறப்புக்கு காரணம் நிதி நெருக்கடி தான்’ என்று எழுதியிருந்தார்.