இடிந்து விழுந்த 8 மாடி கட்டிடத்தில் கையை வெட்டி வீசி தப்பி வந்த பெண்!!

916

Women

டாக்காவில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் தன் கையை வெட்டி போட்டு விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

வங்காள தேசத்தின் தலைநகரான டாக்காவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணா பிளாசா ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தின் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சுமார் 134 பேர் பலியாகினர். 2400 பேர் உடல் உறுப்புகள் சிதைந்து படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து வெளியே வர முடியாமல் போராடிய ஒரு பெண், தனது ஒரே குழந்தையை காப்பாற்றவாவது உயிர் பிழைத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் தனது ஒரு கையால் ரம்பத்தை எடுத்து, மிகப் பெரிய கல்தூணின் கீழ் சிக்கியிருந்த மற்றொரு கையை வெட்டி வீசி விட்டு தப்பி வந்த சோகக் கதை தற்போது வெளியாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தை பற்றி மாற்று திறனாளியாக மாறிய ரோஜினா பேகம்(26) கூறுகையில், சம்பவத்துக்கு முந்தைய நாளே கட்டிடத்தில் விரிசல் விட்டிருந்ததாக முந்தைய பகுதி நேரத்தில் வேலை செய்த பெண்கள் கூறினார்கள்.

ஆனால் நிர்வாகம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து காலையில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, சுமார் 9 மணியளவில் மின்சாரம் தடைபட்டது.

தற்காலிக மின்சாரம் பெறுவதற்காக ஜெனரேட்டரை போட்ட போது, கட்டிடம் குலுங்க தொடங்கியது. 90 வினாடிகளுக்குள் மொத்த கட்டிடமும் தரை மட்டமாகி விட்டது.

என் மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்து நசுக்கியதில் இதயத்தின் ஒரு பகுதியில் பயங்கரமான வலி எடுக்க ஆரம்பித்தது. காது வழியே ரத்தம் கொப்பளித்து வெளியேறத் தொடங்கியது.

என்னைச் சுற்றிலும் ஏராளமான பேர் கதறித் துடித்துக் கொண்டிருந்தனர். இருட்டும் வரை கத்திக் கத்தி ஓய்ந்து மயங்கி விழுந்து விட்டேன்.

மறுபடி நான் கண் விழித்த போது சம்பவம் நடந்து இரண்டு, மூன்று நாள் ஆகி விட்டிருக்கும் என்பதை அங்கு வீசிய பிண வாடையை வைத்தே அறிந்துக் கொள்ள முடிந்தது.

என் மீது கொண்க்ரீட் துண்டுகளும், இரும்பு கம்பிகளும் அழுத்திக் கொண்டிருந்ததில் உயிர் போவதைப் போன்ற தாங்க முடியாத வேதனை. அதே போல் தலையிலும் நிறைய காயங்கள், இடது கையின் மேல் மிகப் பெரிய ராட்சத தூண் விழுந்து நசுக்கிக் கொண்டிருந்தது.

உதவி கேட்டு கத்திய பிறகு கொண்க்ரீட் குவியல்களுக்கு மறுபுறத்தில் இருந்து ஒரு டாக்டர் எட்டிப் பார்த்தார்.

என்னை நம்பி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று கதறினேன்.அவரால் நான் இருக்கும் பகுதிக்கு அருகில் நெருங்கி வர முடியவில்லை.

உன்னுடைய கையை துண்டித்தால், நீ உயிர் பிழைக்கலாம் என்று டாக்டர் கூறி அங்கிருந்தபடியே ஒரு ரம்பவாளை தூக்கிப் போட்டார்.

என் ஒரு கையால், மற்றொரு கையை வெட்டும் துணிச்சல் எனக்கு வரவே இல்லை. ஆனால், இங்கேயே இருந்தால் நிச்சயமாக உயிர் பிழைக்க முடியாது. நம் மகளை யார் காப்பாற்றுவார்கள்? என்பதை நினைத்து பார்த்தேன்.

அடுத்த நொடி எனது உடலுடனான இடது கையின் தொடர்பை என் வலது கையில் இருந்த ரம்பவால் துண்டிக்க தொடங்கி விட்டது.

அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பிணக் குவியலில் என் தங்கையின் உடலும் ஒன்று என்பதை டி.என்.ஏ. சோதனை மூலம் டாக்டர்கள் உறுதிப்படுத்தினர் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.