நீர்கொழும்பில் இருந்து சிலாபம் தொடுவா பிரதேசத்திற்கு தனது 19 வயதுடைய காதலியை தேடிச் சென்ற 30 வயதுடைய இளைஞனின் சடலம் பாழடைந்த கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக தொடுவா பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு, திபிரிகஸ்கட்டுவ ஹரிச்சந்திர புர பிரதேசத்தை சேர்ந்த சமித் மதுசங்க என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
ஒரு பிள்ளையின் தந்தையான குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் வசித்து வந்த அதே பகுதியில் உள்ள 19 வயது இளம்பெண் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
தங்களுடைய மகள் திருமணமான ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டு வருவதை அறிந்த குறித்த பெண்ணின் பெற்றோர்கள் மகளை, மஹவெவ தொடுவா பிரதேசத்தில் உள்ள உறவினரின் வீட்டில் தங்க வைத்துள்ளனர் .
இது தொடர்பாக தகவல் அறிந்த இளைஞன் கடந்த 10ஆம் திகதி இரவு தனது காதலியை தேடி அவர் தங்கி இருந்த வீட்டருகில் சென்று மறைவாக இருந்துள்ளார் .
வீட்டுக்கு வெளியில் யுவதிசென்ற போது இளைஞன் வந்து அவரை அழைத்ததாக கூறிய உறவினர்கள், தனது காதலனைக் கண்டதும் யுவதி வீட்டுக்குள் ஓடிச் சென்றுள்ளார்.
இதன்போது இளைஞனை பிடிக்க வீட்டில் இருந்த சிலர் துரத்திச் சென்ற போது அவர் இருட்டிலேயே தப்பியோடிய நிலையில் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் ஏதோ விழும் சத்தம் கேட்டதாக பெண்ணின் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .