வவுனியா ஈச்சங்குளத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் கொலை வழக்கில் எதிரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!!

299

Vav

ஈச்சங்குளத்தில் வெட்டிக் கொல்லப்பட்டவரின் கொலை வழக்கில் எதிரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மொஹொஜிறின் மிஸ்கின் என்ற முச்சக்கர வண்டிச் சாரதி வெட்டுக்காயங்களுடன் ஒரு மரத்தடியில் இறந்து கிடந்த, கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கில் எதிரியில்லாத விளக்கத்தின் பின்னர், கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருந்த எதிரி சிவன்சிவகுமார் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் திகதி ஈச்சங்குளம் காட்டுப்பகுதியில் வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த 61 வயதுடைய மொஹொஜிறின் மிஸ்கின் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தமை கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. சடலத்துக்கு அருகில் சிறிது தூரத்தில் இரத்தக்கறை படிந்த நிலையில் அவருடைய முச்சக்கர வண்டி இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய பொலிசார், தரணிக்குளம் பகுதியில் இருந்து சென்ற பஸ் வண்டியொன்றை மறித்து சோதனையிட்டபோது, அதில் அழுக்கடைந்த, இரத்தக் கறையுடன் கூடிய அழுக்கான ஆடையணிந்து, தலைமுடி மற்றும் முகம் என்பன அலங்கோலமான முறையில், உடலில் கீறல் காயங்களுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் பயணம் செய்த சிவன் சிவகுமார் என்பவரைக் கைது செய்திருந்தனர்.

அவரிடமிருந்து இரத்தக்கறை படிந்த டொலர் மற்றும் இலங்கை நாணயத்தாள்களையும் பொலிசார் கைப்பற்றியிருந்தனர். விசாரணைகளின் பின்னர், இந்த சந்தேக நபர், அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டபோது, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகள் அவரை அடையாளம் காட்டியிருந்தனர்.

பின்னர் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடப்பட்டிருந்த இவர், வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தார். எதிரி இல்லாத நிலையில் இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாணைக்கு உட்படுத்தப்பட்டது. கொலைச் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் எதுவும் இல்லாத போதிலும், கொல்லப்பட்டவருடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பது விசாரணைகளில் நிரூபணமாகியிருந்தது.

சூழ்நிலைச் சான்று விசாரணைகளின் அடிப்படையில், அளிக்கப்பட்ட சாட்சியங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகவும், தளம்பலின்றி இருந்ததாலும், எதிரியின் உடைமையில் இருந்த சான்றுப் பொருட்களின் இரத்தக் கறையானது இறந்தவரின் இரத்தம் என்பதை மரபணு பரிசோதனைச் சாட்சியம் உறுதிப்படுத்தியிருந்ததாலும், இந்தக் கொலையை எதிரியே செய்தார் என்பது நியாயமான சந்தேக்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டிருப்பதனால், எதிரிக்கு மரண தண்டனை விதிப்பதாகக் கூறி நீதிபதி கனகா சிவபாதசுந்தரம் தீர்ப்பளித்துள்ளார்.

தலைமறைவாகியுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எதிரி சிவன் சிவகுமாருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ள நீதிபதி, இவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், வெளிநாடு ஒன்றிற்குச் சென்றாலும், அல்லது வெளிநாடு ஒன்றிலிருந்து நாடு திரும்பினாலும், இவரைக் கைது செய்யுமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சர்வதேச பொலிசாருக்கும் அறிவித்து, அவர்களின் உதவியுடன் அவரைக் கண்ட இடத்தில் கைது செய்வதற்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.