வவுனியா குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அகற்றப்பட்டமைக்கு தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இ.பிரசாத் கண்டனம்!!

281

Pirasathவவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அடங்கலாக 15 கடைகள் கடந்தவாரம் அகற்றப்பட்டமைக்கு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் இ.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வவுனியா நெற் இணையத்திற்கு கருத்து தெரிவித்த அவர்..

கடந்தவாரம் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன் விற்பனை நிலையங்கள் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இக் கடைகள் அகற்றப்படுவதற்கு முன்னர் பிரதேச சபையின் உறுப்பினர் என்ற வகையில் எனக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் ஆனால் உறுப்பினர்கள் எவருடனும் கலந்தாலோசிக்காமல் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்வாதாரதுடன் தொடர்புடைய இது போன்ற சிக்கலான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கண்டிப்பாக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். அத்துடன் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் உரிய மாற்றுவழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு செய்யப்படவில்லை. அதனால் 15 குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.

இங்கு பாதிக்கப்பட்ட வியாபாரிகளில் விசேடதேவைக்குட்பட்டோர், கணவனை இழந்தோர் எனப் பலரும் அடங்குகின்றனர். எனவே அவர்களுக்குரிய மாற்றுவழி செய்யப்படவேண்டும்.இது தொடர்பாக தொடர்ந்து நடைபெறவுள்ள அமர்வுகளில் சபையின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளேன் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையால் குழுமாட்டுச் சந்தியில் உள்ள மீன்விற்பனை நிலையங்கள் அகற்றல் : கடை உரிமையாளர்கள் தவிப்பு!!