இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தளை மேல் நீதிமன்றம் இந்த பிடிவிராந்து உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.
ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதாக உப்புல் தரங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உப்புல் தரங்க தற்பொழுது இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழு தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உப்புல் தரங்கவை விமான நிலையத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டி பல்லேகலே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த லெஜன்ட்ரோபி ரி20 கிரிக்கெட் போட்டியின் போது ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்வதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக உப்புல் தரங்க முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளில் உப்புல் தரங்க இன்று சாட்சியமளிக்க தவறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த போட்டி தொடரில் உப்புல் தராங்க கண்டி ஆர்மி அணிக்காக விளையாடியிருந்ததுடன் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜையான யோகி பட்டேல் என்பவர் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு உப்புல் தரங்கவை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த அழுத்தம் தொடர்பில் உப்பு தரங்க முறைப்பாடு செய்திருந்தார். இன்றைய தினம் உப்புல் தரங்கவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட இருந்தது.
இந்த நிலையில் உப்புல் தரங்க நீதிமன்றிற்கு அறிவிக்காது அமெரிக்க நேஷனல் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார். எனவே அவருக்கு இவ்வாறு நீதிமன்றம் உத்தரவு பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் || தொடர்புகளுக்கு 0719567890