கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்டதால், 6 வயது சிறுமியை மூச்சு முட்ட சாப்பிட வைத்து மூச்சு திணறல் ஏற்படுத்திக் கொலைச் செய்துள்ள சம்பவம் ஆந்திராவை அதிர செய்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரைச் சேர்ந்தவர் அசனத்துல்லா.
இவரது மனைவி சானியா. இந்த தம்பதியருக்கு 6 வயதில் அஸ்வியா என்ற மகள் இருந்தார். அதே பகுதியில் வசித்து வரும் ரேஷ்மா எனும் பெண்ணுக்கு அசனத்துல்லா வட்டிக்கு ரூ.3 லட்சம் கடன் கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் ரூ.3 லட்சம் கடன் வாங்கிய பிற்கு ரேஷ்மா அசலையும் தராமல், கடனுக்கான வட்டியையும் தராமல் இருந்து வந்துள்ளார்.
கடனுக்கான வட்டிப் பணத்தை அசனத்துல்லா ரேஷ்மாவிடம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், கடந்த 1ம் தேதி தனது வீட்டிருகே விளையாடிக் கொண்டிருந்த அசனத்துல்லாவின் மகள் அஸ்வியா காணாமல் போனார்.
பல இடங்களில் தேடிப் பார்த்தும் அஸ்வியா கிடைக்காத நிலையில், தனது மகள் அஸ்வியா காணாமல் போனதாக காவல் நிலையத்தில் அசனத்துல்லா புகார் அளித்தார்.
சிறுமி அஸ்வியாவை தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், புர்கா அணிந்த பெண் ஒருவர் சிறுமியை தூக்கிச் சென்ற காட்சியை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு, காணாமல் போன சிறுமியின் உடல் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது.
போலீசாரின் சந்தேகப்பார்வை ரேஷ்மா மீது விழுந்ததில், ரேஷ்மாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கடனைத் திருப்பிக் கேட்டதால், தனது தாய் ஹசீனாவுடன் சேர்ந்து சிறுமி அஸ்வியாவை கொலை செய்து ஏரியில் வீசியதை காவல்துறையினரின் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்று, மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு சிறுமிக்கு சாப்பாடு போட்டுக் கொலைச் செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து ரேஷ்மாவையும், அவரது தாயாரையும் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.