பதுளை – மஹியங்கனை லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்த 17 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நேற்று (21) மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர் பதுளையில் வசிக்கும் ஜி.எச். திலினி உபேக்ஷா சண்டமாலி 17 வயதுடைய பாடசாலை மாணவி ஆவார்.
இரு நண்பிகள் வீட்டிவிட்டு வெளியேறிய நிலையில், ஒருமாணவி உயிரிழந்த நிலையில் மற்றய மாணவி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பதுளை கந்தேகெதர பிரதேசத்தில் வசிக்கும் இரு மாணவிகள் தனியார் வகுப்பு சென்ற மகள்கள் வீடு திரும்பவில்லையென பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.
இந்நிலையில் 20ம் திகதி இரவு 7.30 மணியளவில் பதுளை பகுதியிலிருந்து மொனராகலை பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், 17 வயதுடைய பாடசாலை மாணவியை ரிதிமாலியத்த பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் கையளித்துள்ளார்.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது தோழியுடன் நேற்று முன்தினம் (20) இருவரும் தற்கொலை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து, காலை 8 மணியளவில் வீட்டில் இருந்து பதுளை நகருக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
அங்கிருந்து மஹியங்கனை பஸ்ஸில் ஏறி, கைபேசியில் இருந்த சிம்கார்டுகளை கழற்றி எறிந்துவிட்டு, மஹியங்கனை நகருக்கு வந்து, சாப்பாட்டு பார்சல் வாங்கி, பாதியை சாப்பிட்டு, மீதியை மீண்டும் பார்சல் செய்து பஸ்சில் சென்றுள்ளனர்.
பதுளை, லொக்கல்ல ஓயா ஏரி பந்தலுக்கு அருகில் பேருந்தில் இருந்து இறங்கி அதனை அடுத்துள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது மீதமிருந்த சாப்பாட்டினை சாப்பிட்டனர்.
பின்னர், உயிரிழந்த மாணவி தனது புத்தகப் பையில் இருந்த புத்தகத்தில், ‘நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களைத் தேடாதீர்கள்’ என எழுதி வைத்துவிட்டு, இருவரும் தற்கொலை செய்து கொள்வதற்காக லொக்கல்ல ஓயா நீர்த்தேக்கத்திற்குச் சென்றுள்ளனர்.
எனினும் ஒரு மாணவி தயங்க, மற்றைய மாணவி, இப்போது வீடு திரும்பினால் பெற்றோர் கேட்கும் கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வாள் கேட்ட்டு நீர்த்தேக்கத்தில் குதித்ததாக உயிருடன் உள்ளமாணவி பொலிஸாரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி தான உதவி கோரியதாகவும், இதனையடுத்து குறித்த நபர் சிறுமியை பாதுகாப்பாக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நேற்று (21) பிற்பகல் மஹியங்கனை நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
அதேவேளை இந்த பாடசாலை மாணவி தனது தோழியுடன் தற்கொலை செய்து கொள்ள வந்ததற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது